மூட்டு ஆரோக்கியம் என்பது நம்முடைய உடலை சுதந்திரமாக அசைப்பதற்கும், எளிதாக நகர்வதற்கும் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலத்தை பராமரிக்கவும் முக்கியமான ஒன்று. வலிமையான மற்றும் ஆரோக்கியமான மூட்டுகள் இருந்தாலே நமது கை, கால்கள் மற்றும் உடலை எந்தவிதமான வலியுமின்றி சுழற்ற முடியும்.

மூட்டுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்போது, அசௌகரியம் மற்றும் அசைவுகளில் இடையூறு ஏற்படும். இது பெரும்பாலும் வயது முதிர்ச்சி, வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், உடற்பருமன் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இதனால் ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்ட பல மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகலாம். ஆனால், தொடர்ச்சியான சரியான கவனிப்புகள் மூலம் நம்மால் மூட்டுகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
சரியான உணவுமுறை மற்றும் தேவையான சப்ளிமெண்ட்கள் மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவதை தடுப்பதோடு மட்டுமல்லாது, அதன் வலிமையையும், இயக்க திறனையும் மேம்படுத்துகின்றன. வாழ்கையில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவதும் மூட்டுகள் உறுதியாக இருக்க உதவுகிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கொலாஜன் மற்றும் ஜெலட்டின் போன்ற சத்துகள் மூட்டுகள் தேய்மானம் அடைவதை தடுக்க உதவுகின்றன. மீன், சியா விதைகள், ஆளி விதைகள், வால்நட் ஆகியவற்றில் இவை அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் டி மற்றும் கால்சியம் மூட்டு மற்றும் எலும்புகளின் வலிமையை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை சூரிய ஒளி, கீரை வகைகள் மற்றும் பால் சார்ந்த உணவுகளிலிருந்து பெறலாம்.
அதே நேரத்தில், வைட்டமின் C மற்றும் E மூட்டு திசுக்களை ஆக்சிடேட்டிவ் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. பெர்ரி பழங்கள், விதைகள் மற்றும் நட்ஸ் ஆகியவை இதற்கு சிறந்த ஆதாரங்கள். மெக்னீசியம் மூட்டுகளில் இறுக்கத்தை குறைத்து தசைகளுக்கு ஓய்வளிக்கிறது. இது முழுதானியங்கள், கீரைகள் மற்றும் விதைகளில் அதிகம் உள்ளது.
மூட்டுகளில் வீக்கம் ஏற்படாமல் இருக்க உணவுகளில் குறிப்பிட்ட அளவு கவனம் செலுத்த வேண்டும். மஞ்சள், இஞ்சி மற்றும் கிரீன் டீ போன்ற உணவுகளில் வீக்கம் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், இவை வழக்கமான உணவில் சேர்க்கப்பட வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவையான சப்ளிமெண்ட்கள் எடுத்துக்கொள்ள முடியும். இதனால் மூட்டுகள் தங்கள் இயல்பு செயல்பாட்டை நீண்ட நாட்கள் தக்கவைத்துக் கொள்ளும்.
தண்ணீர் போதுமான அளவு குடிப்பது, உடல் எடையை கட்டுப்படுத்துவது, தினசரி உடற்பயிற்சி செய்வது மற்றும் ரொட்டி, பேக்கரி வகைகள், அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்ப்பது போன்ற வாழ்க்கை முறைகள் மூட்டு ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.