கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களுக்குள் 21 பேர் மாரடைப்பால் இறந்துள்ள சம்பவம் நாட்டில் கவலைக்கிடமான செய்தியாக உள்ளது. இந்த மரணங்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 62 சதவீதம் மரணங்கள் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 5 பேர் 19 முதல் 25 வயதுக்குள் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட மருத்துவமனை தகவல்களின் படி 507 பேர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 190 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக அரசின் முதன்மை செயலாளர் ஹர்ஷ் குப்தா, சில மரணங்கள் மரபணு காரணிகளால் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது எனவும், இதய தசைகளை பாதிக்கும் காரணிகள் உள்ளதாகவும் தெரிவித்தார். இவற்றைச் சரிபார்க்க அரசாங்கம் விசாரணை குழுவை அமைத்து, 10 நாட்களுக்குள் முடிவுகளை அறிவிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த மரணங்களில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் டைப்-1 நீரிழிவு மற்றும் பிற சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.
இதய நிபுணர்கள், இளம் தலைமுறையில் கூட ஏற்பட்ட இந்த மரணங்களுக்கு காரணமாக, மன அழுத்தம், மோசமான வாழ்க்கை முறை, அதிகப்படியான ஜங்க் ஃபுட்ஸ் உட்கொள்வது, தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாமை போன்றவற்றை குறிப்பிடுகின்றனர். மேலும், கோவிட் பிறகு சில இளைஞர்கள் அறியாமலே இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, கொழுப்பு சேர்தல் ஆகியவை இவ்வளவு மரணங்களுக்கு முதன்மை காரணமாக இருக்கலாம்.
இதய நிபுணர் டாக்டர் விவேக் குப்தா கூறுவதாவது, இதயம் திடீரென செயலிழப்பதற்குக் காரணமாக 100% அடைப்பு ஏற்படுதல் இருக்கிறது. இதற்கு முன் வழக்கமான பரிசோதனைகள் மேற்கொண்டு, அடைப்பை கண்டறிந்து மருந்துகளை எடுக்க வேண்டும். CT மற்றும் கரோனரி ஆஞ்சியோகிராபி பரிசோதனைகள் இதற்கான சிறந்த வழிகள் ஆகும். இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், இதய நோய் மூலமாக மரணங்கள் தொடரும் அபாயம் உண்டு.