சென்னை: உடலின் ஆரோக்கியத்துக்கு அனைத்துவித ஊட்டச்சத்துகளும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு சத்தும் முக்கியமானது.
கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மெழுகு போன்ற பொருளான கொலஸ்ட்ரால் நம் உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள், செல்கள் மற்றும் வைட்டமின் டி போன்றவை உருவாவதற்கு மிகவும் அவசியம். இயற்கையாகவே நமது உடல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. ஆனால் கொலஸ்ட்ராலை சில உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் நீங்கள் பெறலாம். இக்கட்டுரையில் சாப்பிட மற்றும் தவிர்க்க வேண்டிய சில அதிக கொலஸ்ட்ரால் உணவுகள் பற்றி காண்போம்.
கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும். ஒருவரது இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல் ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அதனை குறிப்பிட்ட சில அறிகுறிகள் நாம் தெரிந்துக் கொள்ளலாம்.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது மூன்று பகுதிகளில் அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும். தமனிகளின் உட்புறத்தில் கொழுப்புக்கள் குவிந்திருக்கும் போது கைகளில் வலி, சருமத்தின் கீழ் கொழுப்புக்கள் தேங்கி இருந்தால் சருமத்தில் மஞ்சள்-ஆரஞ்சு நிற வளர்ச்சி, கண்களில் உள்ள கார்னியாவின் வெளிப்பகுதிக்கு மேலேயும், கீழேயும் நீல நிற அல்லது சாம்பல் நிற அல்லது வெள்ளை நிற வளையம் நன்கு தெளிவாக காணப்படும்.
உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், அதிக கொலஸ்ட்ரால் பொதுவாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது தான் என்றாலும், நீண்ட கால அதிகளவு கொலஸ்ட்ரால் பக்கவாதம் அல்லது மாரடைப்புக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் நான்கு முதல் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை உடலின் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதித்து கொள்ள வேண்டும்.