உலகளவில் நீரிழிவு நோயால் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள், சுவை அல்லது திருப்தியை சமரசம் செய்யாமல், இயற்கையாக இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த தினையை உணவில் சேர்க்க பரிந்துரைகின்றனர். மும்பை, தானேயில் உள்ள KIMS மருத்துவமனைகளின் நீரிழிவு நோயியல் துறையின் தலைவர் டாக்டர் விஜய் நெகளூர், தினை ஏன் முக்கியமானது என்பதை விளக்கியுள்ளார்.

நீரிழிவு மற்றும் உணவுமுறை மிகவும் நெருங்கிய தொடர்புடையவை. அதிக கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட மைதா அல்லது கோதுமை உணவுகள், இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தி இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன. இந்நிலையில், குறைந்த கிளைசெமிக் குறியீடு (GI) கொண்ட தினை உணவுகள் மெதுவாக செரிமானமாகி, இரத்த சர்க்கரை நிலையை படிப்படியாக உயர்த்துவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகின்றன. உதாரணமாக, ஃபாக்ஸ்டெயில் தினையின் GI சுமார் 50, இது சாதம் அல்லது ரவை உணவுகளுடன் ஒப்பிடும்போது குறைவாகும்.
தினை உணவுகள் நார்ச்சத்து நிறைந்தவை. அதிக நார்ச்சத்து உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தி இன்சுலின் உணர்திறனைக் கூட்டும். இது நீண்ட நேரம் திருப்தி உணர்வை ஏற்படுத்தி அதிக சாப்பிடுவதைத் தடுக்கும், உடல் எடையை கட்டுப்படுத்த உதவும். மேலும், தினை இரத்த சோகை, நரம்பு சேதம், இருதய நோய் போன்ற நீரிழிவு சிக்கல்களுக்கு எதிரான ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டுள்ளது. மெக்னீசியம், இரும்பு, ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் HbA1c கட்டுப்பாட்டுக்கும் உதவுகின்றன.
ஆராய்ச்சிகள் தினை உணவு நீரிழிவை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்பதை காட்டுகின்றன. தினை அடிப்படையிலான உணவை சாப்பிட்ட நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு 12–15% குறைந்தது, HbA1c 17% வரை குறைந்தது. சாதம் அல்லது கோதுமை உணவுகளுக்கு பதிலாக தினை உணவுகளை சேர்ப்பது நீரிழிவை கட்டுப்படுத்துவதோடு, அதன் ஆபத்தையும் குறைக்கும்.
உணவில் தினையை சேர்க்க எளிய வழிகள்:
- காய்கறிகளுடன் தினை கிச்சடி செய்து சாப்பிடலாம்.
- இட்லி, உப்மா போன்ற உணவுகளில் அரிசி அல்லது ரவை மாற்றி தினையைப் பயன்படுத்தலாம்.
- இனிப்புகள் அல்லது பொரித்த சிற்றுண்டிகளுக்கு பதிலாக தினை பஃப்ஸ் அல்லது கஞ்சி சாப்பிடலாம்.