விரைவாக பரவிய சமூக ஊடக தகவல்களின் மூலம் மக்கள் செம்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதை ஒரு புதிய ஆரோக்கிய நடைமுறையாகப் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். ஆனால் லைஃப்ஸ்டைல் நிபுணரும், ஊட்டச்சத்து ஆலோசகருமான லூக் கூடின்ஹோ, இந்த மோகம் பற்றி எச்சரிக்கிறார். இணையத்தில் பகிரப்படும் தகவல்களை ஆராயாமல் பின்பற்றுவது ஒவ்வொருவருக்கும் ஏற்றதல்ல என்பதையும் அவர் நினைவூட்டுகிறார்.

கூடின்ஹோ சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு 17 வயது இளம் பெண் — அகிரா — குறித்து கூறினார். செம்பு பாட்டிலில் உள்ள தண்ணீரை வெறுமனே குடிக்காமல், அதை சூடாக்கி அதில் எலுமிச்சை கலந்ததால்தான் அவளுக்கு வயிற்று வலி ஏற்பட்டது என கூறினார். இது ஒரு வேதியியல் எதிர்வினையை உருவாக்கியது என்றும் விளக்கினார்.
செம்பு நிச்சயமாக நன்மை தரக்கூடியது. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, செரிமானத்திற்கு உதவியும் செய்கிறது. இரத்த சிவப்பணுக்கள் உருவாகவும், ஆழமான செல்புனரமைப்புகளுக்கு ஆதரவாகவும் வேலை செய்கிறது. ஆனால், இதைப் போல சக்தி வாய்ந்த பொருட்கள் “மிதமான அளவில்” தான் உட்கொள்ளப்பட வேண்டும்.
அதிகமாக செம்பு நீரை உட்கொள்வது வயிற்றுப்புற எரிச்சல், குமட்டல், வலி போன்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். எனவே, தினமும் இரவில் ஒரு குவளை அளவில் தண்ணீரை செம்பு பாத்திரத்தில் விட்டு, காலையில் அதை வெறும் வயிற்றில் குடிப்பது போதும். நாள் முழுவதும் அதை குடிக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.
அகிரா செய்த தவறு, தண்ணீரை வெப்பமாக்கி அதில் எலுமிச்சை சேர்த்தது. இதனால் அந்த கலவையில் ஏற்பட்ட வேதியியல் மாற்றமே, அவளுக்கு வயிற்று வலியை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், அவரது குடும்பத்தில் மற்றவர்கள் இதுபோன்ற முறையை பின்பற்றாததால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதனால் தான், “படித்தவராக இருங்கள், பின்தொடர்பவராக அல்ல” என்பதே கூடின்ஹோவின் முக்கிய அறிவுரை. ஆரோக்கிய நடைமுறைகளை மேற்கொள்ளும் முன் அதன் முழு விளைவுகளை தெரிந்து கொண்டு செயல்படுவது அவசியம்.