திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பேருந்து நிலையம் அருகே, தர்பூசணி பழங்களில் கலப்படம் உள்ளதாக பரவிய வதந்தியை எதிர்த்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விவசாயிகள் ஒரு நூதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் போல் வேடமிட்டு, தர்பூசணி பழங்களுக்கு ‘மருத்துவம் பார்ப்பது’ போல் நிகழ்ச்சி நடத்தி, பழம் பாதுகாப்பானது, சுவையானது என்பதைக் குறிப்பிடும் கோஷங்களை எழுப்பினர்.
தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த வதந்தியால் தர்பூசணி பழங்களின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் விவசாயிகள், உணவு பாதுகாப்புத் துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டுமெனவும், உண்மையை பொதுமக்களுக்கு விளக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்பூசணி விவசாயத்தால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றதும் அவர்கள் வலியுறுத்திய முக்கிய கோரிக்கையாகும்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, விவசாயிகள் தர்பூசணி பழங்களை வெட்டி காட்டி, எந்தவிதமான ரசாயன கலப்பும் இல்லை என நிரூபித்து, அந்த பழங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். கடந்த மாதத்தில் கிலோ ரூ.15க்கு விற்கப்பட்ட தர்பூசணி, தற்போது கிலோ ரூ.3க்கு விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையான நட்டத்தில் இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்பூசணி பழம் தரம் உயர்ந்தது என அதிகாரிகள் ஊடகங்கள் மூலமாக அறிவிக்க வேண்டும். மேலும், சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.75,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.