சென்னை: ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம், இரும்புச்சத்துக் குறைபாடு இருப்பதை கண்டறிய முடியும். இரும்புச் சத்துக் குறைபாட்டை உணவின் மூலம் எளிதாகச் சரி செய்ய முடியும்.
சிவப்பு இறைச்சி, பீன்ஸ், கீரைகள், பீட்ரூட், உலர் பழங்கள் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் இரும்புச் சத்தைப் பெறலாம். உடல் இரும்புச் சத்தை முழுதாக கிரகிக்க, வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும்.
நேஷனல் ஹெல்த் கூற்றுப்படி மிகவும் மிதமான இரும்புச் சத்துக் குறைபாடு இருப்பவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் தோன்றாமலும் போகலாம். ஆனால் இரும்புச் சத்துக் குறைபாடு தீவிரமாகும் போது சில அறிகுறிகள் காணப்படும்.
இரும்புச் சத்து குறைவாக இருப்பதன் அறிகுறிகள்: மூச்சு விடுவதில் சிரமம், முடி பாதிப்பு, நகம் உடைதல், தீவிரமான சோர்வு, ஆற்றல் இல்லாதது போல உணர்வு, கவனமின்மை/ கவனக் குறைவு/ கவனச்சிதறல், நாக்கு சிவந்து போவது, கைகள் மற்றும் கால்கள் சில்லிட்டு போவது, நெஞ்சு வலி மற்றும் படபடப்பு. எனவே இரும்பு சத்து குறைபாடு குறித்து கவனமாக இருக்க வேண்டும்.