சென்னை: இரவு நேரத்தில் தாமதமாக ஒருசில உணவுகளை உட்கொண்டால், அது இரவு தூக்கத்தை கெடுப்பதோடு, செரிமானத்தை பாதிக்கும் மற்றும் உடல் பருமனை அதிகரித்துவிடும்.
பொதுவாக காப்ஃபைன் நிறைந்த உணவுகளை மாலை 6 மணிக்கு மேல் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் காப்ஃபைன் ஒருவரது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். ஒருவரது தூக்கத்தில் இடையூறு ஏற்பட்டால், அதுவே உடலின் பல செயல்பாடுகளை பாதிக்கும். எனவே காப்ஃபைன் நிறைந்த சாக்லேட், டீ, காபி போன்றவற்றை மாலை வேளையில் இருந்தே குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகள் செரிமானமாக சற்று கடினமாக இருக்கும். இத்தகைய உணவுகளை இரவு நேரத்தில் தாமதமாக உட்கொள்ளும் போது, அது வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த உணவுகளை உட்கொண்டதும் தூங்கினால், அதில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே உடலில் தேங்கிவிடும். இதன் விளைவாக ஒரு கட்டத்தில் இதய நோயின் அபாயம் அதிகரித்துவிடும். எனவே பர்கர், பிரெஞ்சு ப்ரைஸ், ப்ரைடு சிக்கன் போன்றவற்றை இரவு நேரத்தில் உட்கொள்ளாதீர்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் செயற்கை பொருட்கள் அதிகம் இருப்பதால், சாதாரணமாகவே இந்த வகை உணவுகளை உட்கொண்டால், அது வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். அதுவும் இரவு நேரத்தில் இந்த உணவுகளை உட்கொண்டால், அது தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தும். எனவே எளிதில் ஜீரணமாகக்கூடிய முழு தானிய உணவுகளை உட்கொள்ளுங்கள்.