நீரிழிவு நோய் என்பது தவறான உணவு முறையும், உடற்பயிற்சி குறைவும்தான் முக்கியக் காரணிகள் என அனைவரும் நம்பும் நிலையில், சமீபத்திய ஆய்வொன்று மனநிலையும் அதற்கு நேரடி தொடர்புடையது என உறுதி செய்துள்ளது. குறிப்பாக, தனிமை மற்றும் சமூக தொடர்பின் குறைவு, நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கக்கூடியதாக இருக்கிறது என ENDO 2025 ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், வயதானோர் அல்லது சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழும் நபர்களில், ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க சிரமப்படுவது மட்டும் அல்லாமல், நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியமும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பலர் உணவுப்பழக்கங்களை சரியாக பின்பற்றாததும், உடலை இயக்காமல் இருப்பதும், மன அழுத்தத்தால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதும் முக்கியமான பாதிப்புகளாகும்.
நிபுணர்கள் பரிந்துரை செய்யும் சில நடைமுறைகள்:
- நட்புறவுகளை வளர்த்திடுங்கள்: உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டாருடன் தொடர்பில் இருங்கள். வாரந்தோறும் ஒரு தொலைபேசி அழைப்பு கூட மனதிற்கு பலத்த உற்சாகத்தை தரும்.
- சமூக குழுக்களில் கலந்துகொள்ளுங்கள்: வாசிப்பு மன்றங்கள், நடைபயிற்சி குழுக்கள், தன்னார்வ குழுக்கள் என ஏதாவது ஒன்றில் பங்கு பெறுங்கள். புதிய நண்பர்களை உருவாக்க இது உதவும்.
- ஆன்லைன் மூலம் தொடருங்கள்: நேரடி தொடர்பு ஏற்றது என்றாலும், உடனடி சந்திப்பு சாத்தியமில்லாத போதிலும் ஆன்லைன் வழியே பேசுவது தனிமையை தணிக்கும்.
- தன்னார்வ தொண்டு செயலில் ஈடுபடுங்கள்: இது சமூக பங்களிப்பு மட்டுமல்ல, உங்களுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை அனுபவத்தை வழங்கும்.
- புதிய திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்: இது உங்கள் நம்பிக்கையை வளர்க்கும், மகிழ்ச்சியையும் சமூக உறவுகளையும் அதிகரிக்கும்.
- செல்லப்பிராணிகளின் துணை: மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
- உங்களுடைய உணர்வுகளைப் பகிருங்கள்: தனிமை உணர்வு மேலிடப்படும்போது, நெருங்கியவர்களோடு அல்லது மருத்துவ நிபுணருடன் பகிர்வது தீர்வின் தொடக்கம்.
முக்கிய கவனம்: தனிமை என்பது வெறும் மனநிலை பிரச்சனை அல்ல. அது உங்கள் உடலையும் பாதிக்கக்கூடியது. குறிப்பாக நீரிழிவு நோய் போன்ற வாழ்க்கைமுறை நோய்களில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மட்டுமன்றி, சமூக உறவுகளை வளர்த்தல் மற்றும் தனிமையை தவிர்த்தல் என்பது ஒரு முழுமையான நல்வாழ்வுக்கே அவசியமானது.