தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட மங்குஸ்தான் பழம், அதன் தனித்துவமான சுவை மற்றும் பலன்களால் “பழங்களின் ராணி” என்ற சிறப்புப் பட்டம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் இதை பெரும்பாலும் குற்றாலம், கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் மற்றும் பர்லியாறு, கல்லாறு போன்ற குளிரான மலைப் பகுதிகளில் காணலாம். அடர்ந்த ஊதா நிற வெளிப்புறத்துடன் உள்ளே வெண்மையான சுளைகளைக் கொண்ட இந்தப் பழம், இனிப்பு மற்றும் புளிப்பு சுவையின் இயற்கையான கலவையுடன் மனதைக் கவர்கிறது.

மங்குஸ்தான் பழத்தை சுவைத்தவர்கள் பெரும்பாலும் அதை பீச், ஸ்ட்ராபெர்ரி, லிச்சி மற்றும் அன்னாசி போன்ற பல பழங்களின் சுவையுடன் ஒப்பிடுகின்றனர். ஆனால் அதன் சுவை மட்டுமல்லாமல் இதில் காணப்படும் மருத்துவ குணங்கள் கூட மிக முக்கியமானவை. வைட்டமின் சி, பி1, பி2, நியாசின், ஃபோலேட் போன்றவை இதில் அதிக அளவில் இருக்கின்றன. அதோடு இரும்பு, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களாக இருக்கின்றன.
மங்குஸ்தான் பழத்தில் “சாந்தோன்கள்” எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சிகளை தடுக்க, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாக சில மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கீல்வாதம், அழற்சி குடல் நோய் போன்ற நிலைகளில் இது நன்மை தரும்.
இந்த பழத்தின் வைட்டமின் சி உள்ளடக்கம் இயற்கையாகவே நோய்களைக் குறைக்கும் சக்தியை வளர்க்கும். உடல் குளிர்ச்சியை தரும் பண்பும் இதில் காணப்படுகிறது. அதோடு இதில் உள்ள நார்ச்சத்து செரிமான முறையை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
மற்றொரு முக்கியமான அம்சம் என்னவெனில், இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும் வகையில் செயல்படுகின்றன.
மொத்தத்தில், மங்குஸ்தான் ஒரு சுவையான பழமாக மட்டுமல்ல, உடல் நலத்திற்கும் ஊட்டச்சத்து நலன்களுக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் ஒரு அரிய இயற்கை பரிசாகும்.