இன்றைய காலக்கட்டத்தில் புகைப்பிடிப்பு என்பது பலரின் வழக்கமான பழக்கமாகிவிட்டது. “ஏன் புகைப்பிடிக்கிறோம்?” என்ற கேள்விக்கு விடை தெரியாமலே, மகிழ்ச்சியான ஒரு செயலாக நினைத்து இந்த பழக்கத்தில் ஈடுபடுகின்றனர். ஆனால், புகைப்பிடிப்பு உயிருக்கு ஆபத்தானது என்பதை அறிந்தும், பலர் தங்களைத் தாங்களே அழிக்கின்றனர்.

இந்த நிலையில், சிலர் தேநீருடன் சேர்ந்து புகைப்பிடிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இது ஒரு மோசமான உடல்நலப் பழக்கம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தேநீருடன் புகைப்பிடிப்பது, உடலுக்கு பலவிதமான தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. அதிக காஃபீனும், புகையிலையும் இரத்த அழுத்தத்தை உயர்த்தக்கூடியவை. இதனால் இதயத் துடிப்பு சீரில்லாமை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனுடன் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.
தேநீர் மிகவும் சூடாக இருந்தால் உணவுக்குழாயின் செல்களை பாதிக்கும். அதே நேரத்தில் புகைப்பிடிப்பதால் செல்கள் மேலும் சேதமடைகின்றன. இந்த இரண்டு காரணங்களால் உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 30% அதிகரிக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
அத்துடன் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்சனைகளும் உண்டு. ஆண்களில் விந்தணுவின் தரம் குறைவதோடு, பெண்களில் கருப்பை செயல்பாடுகளும் பாதிக்கப்படும். தேநீரில் உள்ள காஃபின் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரித்து செரிமான கோளாறுகள், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவை உருவாகும்.
மேலும், புகையிலை மற்றும் தேநீர் இரண்டும் சேரும் போது வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. பல், ஈறு பிரச்சனைகள், சுவாசக் கோளாறுகள், நுரையீரல் அடைப்பு, மன அழுத்தம் மற்றும் திடீர் இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்ற பல பிரச்சனைகள் உருவாகக்கூடும்.
இவை அனைத்தும் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டவை. எனவே, புகைப்பிடிப்பு வழக்கத்தை உடனடியாக நிறுத்துவது நல்ல உடல்நலத்திற்கான முதல் படியாகும். இன்று நிறுத்தி, ஆரோக்கியமான சுவாசத்தை தொடருங்கள்.