சென்னை: இயற்கை நமக்கு அதிகளவில் மருத்துவக்குணங்கள் கொண்ட பலவற்றை வழங்கி உள்ளது. அதை சரியாக பயன்படுத்தியவர்கள் என்றால் நம் முன்னோர்களை மட்டுமே சொல்ல முடியும். நாம் என்ற கேள்வி எழுந்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதேபோல்தான் தேனில் அடங்கி இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம்… ஏராளம்…அதில் சிலவற்றை தெரிந்து கொள்ளலாமா!
பூந்தோட்டத்தில் ரீங்காரமிடும் தேனீக்களால் மகரந்த சேர்க்கை உருவாகிறது. பூக்களில் இருந்து எடுக்கும் தேனை சேகரித்து வைக்கின்றன தேனீக்கள். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மிகப்பெரிய இயற்கை வைத்தியர்கள் இந்த தேனீக்கள்தான். இவை சேகரிக்கும் தேன் மனிதர்களின் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டத்தையும் அளிக்கிறது. மருத்துவக்குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. அந்த மருத்துவக்குணங்கள் சிலவற்றை பார்ப்போம்.
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும். இதயம் வலுவடையும். உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் கரைந்தோடும்.
பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். தேனில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஊட்டம் அளிக்கின்றன. இத்துடன் பழச்சாறில் உள்ள வைட்டமின்களும் கலப்பதால் அபரிமிதமான சத்து உண்டாகிறது.
ரத்த அபிவிருத்திக்கு சிறந்த மாதுளம் பழத்தை ஜீஸாக்கி அதில் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும் என்பது தெரியுங்களா?
இருமலுக்கு உடனடி வைத்தியம் இருக்குங்க… எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு பாருங்க… இருமல் படிப்படியாக குறைந்து விடும். நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும்.
ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் சூடு தணியும். உடல் குளிர்ச்சி அடையும். குடல்புண், வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் விரைந்து குணம் ஏற்படும்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிடும் போது பித்தம் தீர்க்கிறது. கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை ஓடியே போகும். சுண்ணாம்புடன் தேன் கலந்து தடவ கட்டிகள் உடையும். வீக்கம் குறையும். இப்படி அதிசய அற்புத குணங்கள் கொண்டதுதான் தேன்.