சமீப ஆண்டுகளாக இந்தியாவில் நீரிழிவு நோய் ஒரு பெரிய சுகாதார பிரச்சனையாக மாறி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா “உலகின் நீரிழிவு தலைநகரம்” என்றும் குறிப்பிடப்படுகிறது. மதிப்பீட்டின்படி, 40 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்த நோய் உள்ளது. மேலும், “உலகில் ஒவ்வொரு ஐந்தாவது நீரிழிவு நோயாளியும் ஒரு இந்தியர்” என்று கூறப்படுகிறது.

முன்பெல்லாம் 40-45 வயதிற்குப் பிறகு நீரிழிவு பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் இன்று 30 வயதை எட்டியவுடன் நீரிழிவு பரிசோதனை செய்ய நிபுணர்கள் அறிவுறுத்தும் நிலை உருவாகியுள்ளது. இன்று வேகமான உலகில், வேலைப்பளுவும், ஆரோக்கியத்தையும் சமநிலையுடன் பராமரிக்க மக்கள் போராடுகிறார்கள்.
தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால், பலரும் நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
பண்டைய காலங்களில் மனிதர்கள் வேட்டையாடி, கிடைத்த உணவை சாப்பிட்டு வாழ்ந்தனர். அப்போது அவர்கள் அதிகமாக சாப்பிட்டாலும், அன்றைய கால கட்டத்தில் அவர்கள் அதிக உடலுழைப்பு செய்ததால், உடலில் கொழுப்பு சேரவில்லை. ஆனால் இப்போது, உடலுழைப்பு குறைந்து, அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளப்படுவதால், அதிகப்படியான உணவு உடலில் கொழுப்பாக தேங்கிவிடுகிறது.
தற்போதைய காலத்தில், பசி இல்லாவிட்டாலும் கூட, அவ்வப்போது ஏதாவது ஒன்றை சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இந்த பழக்கம் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. பெற்றோரில் ஒருவருக்கு நீரிழிவு இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு 60% அதிகம். மேலும், பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு இருந்தால், குழந்தைக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு 90% வரை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோய் வருவதற்கான முக்கிய காரணங்களில் தவறான வாழ்க்கை முறையும் குறிப்பிடத்தக்கது. உடல் இயக்கம் குறைவது, அதிக நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பது, இரவில் தாமதமாக சாப்பிடுவது, தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்வது, காலை உணவை தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
இயற்கையுடன் ஒத்து போகும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் நீரிழிவை தடுக்கலாம். தினசரி நடைப்பயிற்சி, சரியான உணவுப் பழக்கம், மதிப்பீடு செய்யப்பட்ட தூக்க நேரம் ஆகியவை உடல்நலத்தை மேம்படுத்தும்.
அதுமட்டுமல்லாமல், மன அழுத்தமும் நீரிழிவு நோய்க்கு ஒரு காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான மன அழுத்தம், உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது.
மனஅழுத்தத்தை குறைக்கும் யோகா, தியானம், மெதுவான நடைபயிற்சி போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. மேலும், சரியான உணவுப் பழக்கத்தை கடைப்பிடித்து, தேநீர், பானங்கள் போன்றவற்றில் சர்க்கரை சேர்ப்பதை குறைப்பது நல்லது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பச்சை காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். மேலும், தினசரி சரியான உடற்பயிற்சியை மேற்கொள்வது நீரிழிவு நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த உதவும்.
இதனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மனநலம், சரியான உணவு கட்டுப்பாடு ஆகியவை நீரிழிவு நோயை தடுக்க வழிவகுக்கும்.