உணவில் உப்பின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்ததே. சிலர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் உப்பை நுகர்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு சமையலில் பயன்படுத்தும் ‘டேபிள் சால்ட்’-க்கு பதிலாக, சோடியம் குறைந்த உப்பு வகைகளை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
தூள் உப்பு அதிக சோடியம் கொண்டதாக இருப்பதால், இதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க குறைந்த அளவு சோடியம் உள்ள ‘Low Sodium Salt Substitutes (LSSS)’ வகைகளை உணவில் சேர்க்க வேண்டும். உணவில் சோடியம் அளவை குறைப்பதன் மூலம் பல தீவிர நோய்களை கட்டுப்படுத்த முடியும்.
தவறான உணவு பழக்கவழக்கங்களால் உலகளவில் ஆண்டுக்கு 1.9 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். இதில் அதிக சோடியம் உள்ள உணவுகளை அதிகம் உண்பதே முக்கியக் காரணமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5 கிராம் அளவு உப்பு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.
2012-ல் வெளியிடப்பட்ட தகவலின்படி, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவிற்கு மேல் சோடியம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிக உப்பு உட்கொள்வதால் இருதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். இந்தியாவில் பொதுவாக ஒரு நாளைக்கு 8 கிராம் அளவு உப்பு நுகர்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சோடியம் குறைந்த உப்பு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும்.
மாறாக, கடலில் இருந்து பெறப்படும் இயற்கை உப்புகள், கல் உப்பு, இந்து உப்பு, கோஷர் உப்பு போன்றவை கிடைக்கின்றன. நாம் பயன்படுத்தும் டேபிள் சால்ட், இயற்கையாக பெறப்படாததாகும். இது பதப்படுத்தப்பட்டு அயோடின் மற்றும் ஆன்டிகேக்கிங் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதனால், உணவில் சோடியம் அளவை குறைத்து, ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.