சென்னை: பூந்தமல்லி–வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி தமிழக பா.ஜ.க. சார்பில் வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரை 14.64 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள வழித்தடம் முதல் கட்டமாக பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதில் 11 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் மோடி இந்தப் புதிய சேவையை தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கமலாலயத்தில் ஆலோசனை
இதையொட்டி சென்னை கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், பல்வேறு அணிகள் மற்றும் பிரிவுகளின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணைத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11-ம் தேதி நடைபெற உள்ள மெட்ரோ தொடக்க விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய வரவேற்பு ஏற்பாடுகள், கட்சி நிர்வாகிகளின் பங்கேற்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் மேற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு புதிய போக்குவரத்து இணைப்பு கிடைக்க உள்ளது.
