சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் அரசியல் விவகாரத்தில் தவெக ஈடுபடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர். தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் சில முடிவுகள் குறித்து ஆட்சேபனை தெரிவித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
“எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறோம்”
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், “எஸ்.ஐ.ஆரை நாங்கள் எதிர்க்கிறோம். தேர்தல் ஆணையரை தனிநபராக மாற்றினால் மட்டும் பிரச்சினை முடிந்துவிடாது. திசைதிருப்பும் அரசியலுக்கு தவெக இரையாகாது” என்றார்.
மேலும், எஸ்.ஐ.ஆர். பணிகளில் திருத்தம் தேவை என்ற நிலைப்பாட்டை கட்சி ஏற்கெனவே தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து குறிப்பிட்ட வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், அவ்வாறு நடக்காமல் இருந்திருந்தால் தவெக அதிக வாக்குகளைப் பெற்றிருக்கலாம் என்றும் அமைச்சர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் உள் செயல்பாடுகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில், செப்டம்பர் 26-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களும் கூட்டம் நடத்தி பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவுகளை அறிவித்துள்ளனர்.
