சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற வாய்ப்பு இருப்பதாக வடமாநில ஊடகங்களில் வெளியான செய்தி தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் திமுக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தமிழக அரசியல் சூழல் மாறியுள்ளதைத் தொடர்ந்து இந்த விவாதம் எழுந்துள்ளது.
திமுகவுடன் நீண்டகால கூட்டணியில் இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் தற்போது தவெக அணியில் இடம்பெற்றுள்ளதால், திமுக அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற திமுக எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படுவதாக பாஜகவும், மத்திய அரசின் ஆதரவு திமுகவுக்கு தேவையாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ள நிலையில், திமுகவை அமைச்சரவையில் சேர்ப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக வடமாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
