ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் பவன் கேரா மற்றும் ஜம்மு காஷ்மீர் பிராந்திய காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கேரா ஆகியோர் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டனர்.
அப்போது பவன் கேரா கூறியதாவது:-
விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கூடுதல் நிதியுதவி வழங்கப்படும். அரசு நிலத்தில் விவசாயம் செய்யும் நிலமற்ற விவசாயிகளுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு ஏற்பாடு செய்யப்படும்.
மாவட்ட அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களை மேம்படுத்த ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்படும். இது ஜம்மு காஷ்மீர் விவசாயிகளுக்கு 100% நீர்ப்பாசனத்தை உறுதி செய்யும். ஜம்மு காஷ்மீரில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கு மட்டும் மாதம் ரூ.3,500 நிதியுதவி வழங்கப்படும்.
தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், 1 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை 30 நாட்களில் வெளியிடப்படும். அரசு வேலைகள், பாஸ்போர்ட் போன்றவற்றுக்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள் இந்திய ஒருமைப்பாடு நீதி பயணத்தின் போது தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் பேசினர்.
அதன்படி, பெண் குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3,000 வழங்கும் திட்டத்தையும் தொடங்க முடிவு செய்துள்ளோம். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் சிறுபான்மை ஆணையம் அமைக்கப்பட்டு அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.
காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரச்சனைகளை அறிய 20 மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.