புதுச்சேரி: கடலூர் திமுக கவுன்சிலர் சரத் – நிவேதிதா திருமணம் இன்று (ஆகஸ்ட் 30) புதுச்சேரியில் நடைபெற்றது.
தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திருமணத்துக்குத் தலைமை வகித்து பேசியதாவது:-
தி.மு.க.வின் முதல் பொருளாளரின் கொள்ளுப் பேரனின் திருமணம் இது. ஒரு காலத்தில் பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக்கூட உரிமை இல்லை. அவர்களுக்குப் படிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
இந்த நிலையை மாற்றி மாற்றத்தை கொண்டு வந்தது திராவிட இயக்கமான தி.மு.க. தான். இந்தியாவில் முதன்முதலில் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை சட்டம் கொண்டு வந்தவர் கருணாநிதி.
இப்போது பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் பெண்கள் 520 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.
இதனால் தமிழக பெண்கள் மாதம் ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கின்றனர். தமிழகத்தில் பல திட்டங்களால் உயர்கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
காலை உணவு திட்டத்தால் தினமும் 20 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு வருடத்திற்குள் 1.16 கோடி பெண்கள் மாதம் ரூ.1,000 பெறுகிறார்கள்.
இந்தியாவில் தமிழகத்தில் தான் 42 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். மணமகனும், மணமகளும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சுயமரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு நல்ல தமிழ் பெயர் சூட்டவும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.