சென்னை: ஜெயலலிதா இருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று ஆவேசத்துடன் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். எதற்காக தெரியுங்களா?
பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, எங்களுக்காக பிரச்சாரம் செய்த அனைவருக்கும் நன்றி. விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாமக கட்சி நேர்மையான முறையில் வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால் திமுக கட்சி 250 கோடி செலவு செய்து வெற்றி பெற்றுள்ளது.
அந்த தொகுதியில் எம்எல்ஏக்கள் 3 தவணைகளாக பணம் கொடுத்ததோடு, அரிசி, பருப்பு மற்றும் மூக்குத்தி போன்ற பரிசு பொருட்களையும் கொடுத்தனர். தேர்தல் ஆணையம் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது.
அவர்கள் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தது என எதையுமே தடுக்கவில்லை. தேர்தல் ஆணையர் அந்த பதவிக்கு தகுதியானவர் கிடையாது. திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். நான் மக்களை குறை சொல்ல விரும்பவில்லை.
ஏனெனில் அவர்களுக்கு ரூ.500 கூட பெரிய பணம்தான். விழுப்புரம் மாவட்டம் தான் தனிநபர் வருமானத்தில் பின்தங்கி இருக்கிறது. திமுக அரசு ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 வரை செலவு செய்துள்ளது. எனவே விக்கிரவாண்டி தொகுதியில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது.
நாங்கள் கவுரவமான மற்றும் சுயமரியாதையான வாக்குகளை பெற்றுள்ளோம். ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்தது கிடையாது. அவர்களை ஜென்ம விரோதியாக கருதினர். ஆனால் தற்போது அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். மேலும் இந்த இடைத்தேர்தல் முடிவு பொது தேர்தலில் செல்லுபடி ஆகாது. இவ்வாறு அவர் கூறினார்.