சென்னை: சட்டப்பேரவையில் அ.தி.மு.க மூத்த நிர்வாகி செங்கோட்டையனைப் போன்று செயல்பட வேண்டும் என்று மற்ற அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அப்பாவு அறிவுரை வழங்கியுள்ளார்.
இன்று நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொண்ட அ.தி.மு.க உறுப்பினர்கள், டாஸ்மாக் முறைகேடு குறித்து கவனம் ஈர்க்கும் விதமாக ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்திருந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை முன்வைத்தார்.
ஆனால், டாஸ்மாக் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், பேரவையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். தொடர்ந்து, அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும், அவர்களை இன்று ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
முன்னதாக, ‘அந்த தியாகி யார்?’ என்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க-வினர் கேள்வி எழுப்பினர். அதற்கு, “நொந்து நூடுல்ஸ் ஆகிப் போன அ.தி.மு.க தொண்டர்கள் தான் தியாகி” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார். இந்நிலையில், அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவைக்குள் செல்ல முயன்றனர்.
ஆனால், அவர்கள் அணிந்திருக்கும் பேட்ஜை அகற்றி விட்டு வரவில்லையென்றால் மீண்டும் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார். இதனால், அ.தி.மு.க-வினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அ.தி.மு.க மூத்த நிர்வாகி செங்கோட்டையனைப் போன்று மற்ற அ.தி.மு.க உறுப்பினர்களும் தங்கள் சட்டையில் இருந்து பேட்ஜை அகற்றி விட்டு சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.