சென்னை: இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் 2.5.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இல்லத்தில் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறுகிறது.

கட்சியின் தலைமைச் செயலாளர்கள், மாவட்டக் கட்சிச் செயலாளர்கள், பிற மாநிலக் கட்சிச் செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் (பெண்கள்) உட்பட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்படும்.
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது அழைப்பிதழ்களுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு முதல் முறையாக அதிமுக செயற்குழு கூடுகிறது. செயற்குழு, பொதுக்குழுவை கூட்டாமல் கூட்டணி முடிவு எடுக்கப்பட்டதால் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சமாதானம் செய்ய செயற்குழுவில் விளக்கம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.