சென்னை: தமிழக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.
அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் டாக்டர் அஜோய் குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் எஸ்.ராஜேஷ் குமார், செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கொண்டு வருவதற்கு கண்டனம் தெரிவிப்பது, மீண்டும் காமராஜர் அரசை அமைப்பதே எங்கள் இலக்கு என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஆதரவு அமைப்புகள், காங்கிரஸ் தலைவர்களை முன் எப்போதும் இல்லாத வகையில் தாக்கி வருகின்றன.
சமீபகாலமாக, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராகுல் காந்தியின் நாக்கை வெட்டுபவர்களுக்கு ரூ.11 லட்சம் அறிவித்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, காங்கிரஸ் தலைவர்களையும், காங்கிரஸ் சித்தாந்தத்தையும் காக்க லட்சக்கணக்கான தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக உள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் என்எம் ஹெக்டே கூறுகையில், “ராகுல் காந்தியை மிரட்டுபவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
“சிறு விமர்சனங்களுக்கும் கடுமையாக எதிர்வினையாற்றும் பாஜக மீதும், ராகுல் காந்தியை கடுமையாகப் பேசியவர்கள் மீதும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக்கேடானது.