நாமக்கல்: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நாமக்கலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தேமுதிகவின் வளர்ச்சி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்கிறோம். இந்த ஆண்டு முழுவதும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்.

யாருடன் கூட்டணி அமைக்கப்படும், எத்தனை தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவிப்போம். விஜய பிரபாகரனும் நானும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். பெண்களை தவறாகப் பயன்படுத்தும் நிலைமை மாற வேண்டும். இதற்கு மது, கஞ்சா, போதைப்பொருள் ஆகியவையே காரணம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்போதுதான் நிலைமை மாறும். அரக்கோணத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய நபருக்கு தற்போது முன்ஜாமீன் வழங்கப்பட்டாலும், குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றார்.