சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி., மறைந்த எச்.வசந்தகுமாரின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எச்.வசந்தகுமாரின் படத்துக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, மாநில துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், கீழானூர் ராஜேந்திரன், மாநில அமைப்புச் செயலர் ராம் மோகன், மாநில பொதுச் செயலர் தளபதி பாஸ்கர், வர்த்தக காங்கிரஸ் பிரிவு மாநில செயல் தலைவர் எம்.ஜி.ராமசாமி, துணைத் தலைவர் கொண்டல்தாசன், மாவட்டத் தலைவர்கள் எம்.எஸ்.திருவியம், வழக்கறிஞர் முத்தழகன், டெல்லி பாபு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுமதி அன்பரசு உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ரயில்வே துறையில் தமிழகத்துக்கு ₹1000 கோடி ஒதுக்கீடு. இதனைக் கண்டித்து மக்களிடம் ₹1001-ஐ ஒப்படைத்து மீண்டும் ரயில்வே துறைக்கும், ரயில்வே அமைச்சரின் வங்கிக் கணக்கிற்கும் அனுப்பும் பிரசாரத்தை தொடங்கியுள்ளோம்.
அரசியல் சட்டத்தை அழித்தவர் இந்திரா காந்தி என்று அண்ணாமலை கூறியுள்ளார். மோடிக்கு கூட அவரை பற்றி பேச தகுதி இல்லை, நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் அவரை பற்றி பேச தகுதி இல்லை.
வாஜ்பாய் அவர்களே இந்திரா காந்தியை இரும்பு பெண்மணி என்று புகழ்ந்தார். அண்ணாமலை இதையெல்லாம் முதலில் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.