புதுடில்லி: 10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
பஞ்சாப் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், தனிப்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், 10 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசநாதன், ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானா ஆளுநராக ஜிஷ்ணுதேவ் வர்மா, சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சந்தோஷ்குமார் கங்வார், சட்டீஸ்கர் ஆளுநராக ராமன் தேகா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேகாலயா மாநிலத்திற்கு விஜயசங்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஜார்க்கண்ட் மற்றும் தெலங்கானா ஆளுநராக உள்ள சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அசாம் ஆளுநர் குலாம் சந்த் கட்டாரியா பஞ்சாப் ஆளுநராக நியமனம்- சண்டிகர் நிர்வாகத்தையும் கவனிப்பார்,.
சிக்கிம் ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.