மும்பை: மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கம்தி தொகுதியிலும், பாஜக தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான அசோக் சவானின் மகள் ஸ்ரீஜெய சவான் போகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் செளார் மேற்கு வாந்த்ரே தொகுதியிலும், கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான நாராயண் ரானேவின் மகன் நிதிஸ் ரானே தற்போது எம்எல்ஏவாக இருக்கும் கன்காவ்லியில் போட்டியிடுகிறார்.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மாநிலத்தில் மகாயுதி கூட்டணியில் பாரதிய ஜனதா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை. இந்த தேர்தலில் 150 தொகுதிகளில் போட்டியிட பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா (உத்தவ் தாக்கரே-ஏக்நாத் ஷிண்டே) 56 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதேபோல், 2014 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 122 இடங்களிலும், சிவசேனா 63 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதற்கிடையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 48 இடங்களில் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி (எம்விஏ) 30 இடங்களில் வெற்றி பெற்றது.