திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே சில மலையாள படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமைச்சர் பதவி ஏற்க வேண்டாம் என சுரேஷ் கோபி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அமித்ஷா மறுத்துவிட்டார். மத்திய அமைச்சர் என்பதை விட நடிப்பு தான் முக்கியம் என்றும், விரைவில் படங்களில் நடிக்க அனுமதி கிடைக்கும் என நம்புவதாகவும் சில மாதங்களுக்கு முன் சுரேஷ் கோபி கூறியிருந்தார். ஆனால் சுரேஷ் கோபியை படங்களில் நடிக்க அனுமதிக்க மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அவர் படங்களில் நடிக்க பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சரின் பணியை சரியாக பார்க்கவும், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவும் சுரேஷ் கோபிக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில வருடங்களாக தான் வளர்த்து வந்த தாடியை ஒட்டக்கொம்பன் படத்திற்காக சுரேஷ் கோபி அகற்றினார். அவர் தனது தாடி இல்லாத புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
மாற்றம் இல்லாதது மாற்றத்துக்கு மட்டும் தான் என்று தனது படத்திற்கு கீழே குறிப்பிட்டுள்ளார்.