புதுடெல்லி: காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, ஹிமாச்சல், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சனைகள் குறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் கார்கே, ‘ஒவ்வொரு மாநில காங்கிரஸ் தலைவரும் சரியான பட்ஜெட்டில் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் எதிர்காலத்தில் நிதிப் பிரச்சனைகள் வராது.
இந்த கருத்துக்கு பதிலளித்த பிரதமர் மோடி கூறியதாவது:- பொய்யான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினம் அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி இப்போதுதான் உணர்ந்துள்ளது. பிரச்சாரத்திற்கு முன்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்பதை அறிந்த காங்கிரஸ் கட்சி தற்போது மக்கள் முன் மோசமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் வளர்ச்சிப் பாதையும், நிதி ஆரோக்கியமும் மோசமான நிலைக்கு மாறி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பொய்யான வாக்குறுதி கலாச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இத்தகைய அரசியலால் பாதிக்கப்படுவது ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள். இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. தெலுங்கானா விவசாயிகள் வாக்குறுதி அளிக்கப்பட்ட கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கின்றனர். காங்கிரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன.
இந்திய மக்கள் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் பழைய போலி வாக்குறுதிகள் அல்ல. இவ்வாறு மோடி கூறினார்.