சென்னை: காங்கிரஸ் கட்சி தலைவர்களை விமர்சிக்க அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களில் பகிரங்கமாக கருத்துகள் வெளியாகி வருகின்றன.
காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக இயக்கம். கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பு. கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்வது வழக்கம். இத்தகைய நடைமுறைக்கு முற்றிலும் மாறாக, ஊடகங்கள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் மூலம் கருத்துக்களை வெளியிடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அதே சமயம், என் மீதான விமர்சனங்களை தாங்கவும், எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
அதற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீதான எந்த விமர்சனமும் அனுமதிக்கப்படாது. இதுபோன்ற செயல்கள் கட்சி விரோத செயலாக கருதப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.