சென்னை: மத்திய அரசின் நிதியைப் பெற்று அதற்கான பாடத்திட்டம் வகுக்காமல், ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை ஏமாற்றும் செயல் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு கல்வியே பாதை என்பதால், அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை, எளியோர், ஒடுக்கப்பட்டோர், சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், நான்கு ஜோடி சீருடைகள், புத்தக பைகள், காலணிகள், கணித உபகரண பெட்டிகள், வண்ண பென்சில்கள், புவியியல் வரைபட புத்தகங்கள், மிதி வண்டிகள், மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது தமிழகத்தில் பாடப்புத்தகங்கள் தாமதமாக மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இந்நாட்டின் எதிர்காலத் தூண்களுக்கு கணினி வழிக் கல்வியின் முக்கியத்துவம் கருதி மத்திய அரசு தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் திட்டத்தை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைத்து ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணினி கல்வி கற்பிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கி ஆண்டுதோறும் நிதி ஒதுக்கி பராமரிக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கணினி கல்வி கற்பிக்கப்படுவதில்லை, கணினி அறிவியல் பாடத்திட்டம் இல்லை, அலுவலக வேலை மற்றும் இதர தேவைகளுக்கு ஆய்வகம், 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கணினி கல்வி பயிற்சி வழங்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 6,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் மற்றும் கல்வி பட்டதாரி ஆசிரியர்கள் கணினிக் கல்வி கற்பிக்க வேண்டிய நிலையில், கணினி அறிவியல் மற்றும் கல்விப் பட்டம் பெறாத 1,200 கணினி ஆசிரியர்களை மட்டுமே திமுக அரசு தற்காலிகமாக நியமித்துள்ளது.
அதே நேரத்தில், மத்திய கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் கற்பித்தல் வழங்கப்படுகிறது. மத்திய அரசிடம் நிதி பெற்று, அதற்கான பாடத்திட்டத்தை உருவாக்காமல், ஆசிரியர்களை நியமிக்காமல், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் செயல் மட்டுமின்றி, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை தனியார் பள்ளிக்கு மாற்றும் முயற்சி. திமுக அரசின் இந்த செயல் ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குவதற்கு சமம். இத்திட்டத்தை திமுக அரசு முறையாக செயல்படுத்தியிருந்தால் கணினி அறிவியல் மற்றும் கல்வி பயின்ற கிட்டத்தட்ட 6000 ஆசிரியர்களுக்கு அரசு வேலை கிடைத்திருக்கும்.
இதையும் திமுக அரசு சீரழித்து விட்டது. திமுக அரசின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுருங்கச் சொன்னால், நிதிச் சீரழிவு, நீர் மேலாண்மைச் சீரழிவு என கல்விச் சீரழிவை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. ஏழை மாணவர்களுக்கு கல்வி என்பது அழியாத சொத்து என்பதை மனதில் கொண்டு, இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கணினி அறிவியல் மற்றும் கல்வியில் பட்டம் பெற்ற ஆசிரியர்களால் கணினி கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.