சென்னை: மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு கடைசி நேரத்தில் அனுமதி தராமல் மக்களை அலைக்கழித்த தி.மு.க. அரசின் அதிகாரப்போக்கு நியாயமல்ல என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மெரினாவில் உள்ள நடுக்குப்பம் பகுதியில், பா.ஜ.க. சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரதமர் மோடியின் “மனதின் குரல்” வானொலி நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு கடைசி நேரத்தில் அனுமதி தராமல் மக்களை அலைக்கழித்த தி.மு.க. அரசின் அதிகாரப்போக்கு நியாயமல்ல. தி.மு.க.வினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் உடனடியாக அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கும் தி.மு.க. அரசு, மக்களோடு பிரதமர் மோடி கலந்துரையாடும் “மனதின் குரல்” நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகளை விதிப்பது ஏற்புடையதல்ல.
சுமார் 1,000 மக்களுக்கு அறுசுவை விருந்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்காக ஒரு வாரத்துக்கு முன்பாகவே தமிழக பா.ஜ.க. சார்பில் போலீசாரிடம் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்போகும் இறுதி தருணத்தில் அனுமதி இல்லை என கூறி வேறொரு புதிய இடத்துக்கு மாற்றியது தி.மு.க. அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் நோக்கமே ஆகும்.
துணை முதல்-அமைச்சர் தொகுதி என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதா? மக்கள் மனதில் மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. ஆட்சி உங்களுக்கு மட்டும் நிரந்தரமானது அல்ல. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.