புதுடெல்லி: அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள சிலர் ஒப்புக்கொள்வதில்லை என்று சித்தராமையாவை டி.கே. சிவகுமார் தாக்கி பேசியுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்-மந்திரி பதவியை பெற சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அகில இந்திய தலைமை சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே. சிவகுமாரை துணை முதல்வராகவும் அறிவித்தது.
இதையடுத்து சித்தராமையா முதல் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக பதவிவகிப்பார். அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவகுமார் முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சித்தராமையா மற்றும் டிகே. சிவகுமார் ஆதரவாளர்கள் இடையே முதல்வர் பதவி தொடர்பாக கடும் விவாதம் நடந்து வருகிறது.
மேலும் இது தொடர்பாக அடிக்கடி சித்தராமையாவும், டி.கே. சிவகுமாரும் டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து கர்நாடகாவில் 5 ஆண்டுகளும் நானே முதல்வராக நீடிப்பேன் என்று சித்தராமையா அறிவித்தார்.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லியில் அரசியலமைப்பு சவால்கள் என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சோனியா காந்தி குடும்பத்தை பாராட்டினார். அதே சமயம் சிலர் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்வதில்லை என்றும் பரபரப்பாக பேசினார்.
கடந்த 2004-ம் ஆண்டு ஜனாதிபதி சோனியா காந்தியை பதவி ஏற்க சொன்னபோது எனக்கு அதிகாரம் முக்கியமில்லை என்று கூறினார். மேலும் ஒரு சீக்கியர், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதார நிபுணர் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். இது ஒரு ஒப்பற்ற அரசியல் தியாக செயல். இவ்வளவு பெரிய ஜனநாயகத்தில் யாராவது இவ்வளவு தியாகம் செய்திருக்கிறார்களா?
இன்று யாராவது ஒரு சிறிய பதவியைக் கூட தியாகம் செய்கிறார்களா? பஞ்சாயத்து மட்டத்தில் கூட பலர் அவ்வாறு செய்வதில்லை. சில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் நம்மில் சிலர் அதிகாரத்தை பகிர்ந்து கொள் ஒப்புக்கொள்வதில்லை என்று பேசினார்.
சிவகுமார் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அவருக்கும் சித்தராமையாவுக்கும் இடையிலான அதிகார பகிர்வு ஒப்பந்தம் குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது.
,