சென்னை: சமீபத்தில் மறைந்த கவிஞர் தணிகைச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது:- தமிழ் தேசியம் என்பது மொழிவழி தேசியம். தமிழ் தேசியம் என்று ஒன்று இருந்தால், மலையாளம், தெலுங்கு போன்ற தேசியங்களும் உண்டு.
இந்தித் திணிப்பை எதிர்த்து, மாநில உரிமைகளை வென்றெடுக்க அனைத்து மொழிவாரித் தேசியங்களும் ஒன்றுபட வேண்டும். பிற மொழிக் குழுக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டக் கூடாது. அது இனவாதமாக மாறலாம். திராவிடம் என்பது சனாதனத்தை எதிர்க்க உருவான கருத்தியல்.
மொழிவழி தேசியம் என்பது திராவிட சித்தாந்தத்தில் இருந்து உருவானது. திராவிடமும் மொழி தேசியமும் வேறு வேறு அல்ல. இதன் மூலம் திராவிடத்தை எதிரியாக காட்டி தமிழ் தேசியத்தை வளர்க்க முயல்கின்றனர். அது வெற்றி பெறாது. அந்த அரசியல் பேசுபவர்களை எதிர்க்கும் நோக்கத்தில் நான் பேசவில்லை. இப்படி பேசும் அரசியல் சனாதன எதிர்ப்பின் போக்கையே மாற்றுகிறது என்ற கவலையில்தான் பேசுகிறேன்.
தேசியத்தை புரிந்து கொண்டால் திராவிடம் அல்லது தமிழ் தேசியம் பற்றிய உரையாடல் தவறு என்பதை புரிந்து கொள்ளலாம். இவ்வாறு திருமாவளவன் பேசினார். இந்நிகழ்ச்சியில் வி.எஸ்.சி. பொதுச் செயலாளர் சிந்தனைசெல்வன், துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு, தலைமைச் செயலர் பாலசிங்கம், செய்தித் தொடர்பாளர் கு. கா.பாவலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.