சென்னை: திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், மாற்றுத்திறனாளிகளை சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் அழைத்ததற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் ஊனமுற்றோரை கலைஞர் அவர்களின் பெயர் சொல்லி “மாற்றுத்திறனாளிகள்” என்று கருணையுடன் அழைத்தார். அதை நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
பொதுக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை பழைய பெயர் சொல்லி அழைத்ததை கட்சித் தலைவர் என் கவனத்துக்குக் கொண்டு வந்தபோது, அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நான் இப்படி ஒரு தவறை செய்தது மாபெரும் தவறு. மாற்றுத் திறனாளிகள் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்காக எனது நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் எவ்வளவு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனி இது போன்ற சம்பவம் நடக்காது என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறியுள்ளார். தொடர் நடவடிக்கைகள்.. இன்று காலை திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை ஸ்டாலின் விடுவித்து அறிக்கை வெளியிட்டார்.
பின்னர், திருச்சி சிவாவை அப்பதவியில் நியமித்து அறிக்கை வெளியிட்டார். இந்த இரண்டு அறிக்கைகளும் கவனத்தைப் பெற்ற நிலையில், சில நிமிடங்களிலேயே துரைமுருகன் தனது நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். காலையில் இருந்து திமுகவினர் வெளியிட்ட அடுத்தடுத்த அறிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.