சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று தவெக அறிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலையொட்டி தவெகவிற்கான தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகம் தனது அரசியல் பயணத்தில் மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டு மக்களைப் பல்வேறு வார்த்தை ஜாலங்களால் தொடர்ந்து ஏமாற்றி வரும் அரசியல் இயக்கங்களுக்கு இடையே மக்களுக்கான உண்மையான ஜனநாயக அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுத்து வருகிறது.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம், வரும் 29ஆம் தேதி (29.03.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு, சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைவர் விஜய் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றுக்கான வெற்றி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்பாளர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கழகத்தினர் 500 பேரைத் தவிர்த்து வேறு எவருக்கும் அனுமதி இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்நிகழ்ச்சி உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் வகையில் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்புடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.