சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநிலம் முழுவதும் பிரம்மாண்டமாக மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற தொனிப்பொருளில், சட்டமன்ற தொகுதி வாரியாக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளன.
இந்த பயணம் இன்று (ஜூலை 7, திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது. பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகள், சாலை ரோடு ஷோக்கள், பொதுக்கூட்டங்கள் என தொடர் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
மாலை 6 மணியளவில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் சந்திப்பு அருகே பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் எடப்பாடி பழனிசாமி, அதன் பிறகு காரமடை, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்பநாயக்கன்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரசார வேன்களில் மக்களை நேரில் சந்தித்து உரையாற்றினார். இரவு 10 மணியளவில் கோவையில் பயணம் நிறைவடைகிறது. கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இந்த பயண ஏற்பாடுகளை முழுமையாக செய்துள்ளனர்.