மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று வருகிறது. தற்போது, மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் துணை முதல்வராகவும் உள்ளனர். இந்நிலையில், புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸை நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு ஷிண்டே தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு தனது சொந்த கிராமமான சாத்தாராவில் முகாமிட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபட்னாவிஸ் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்நிலையில் நேற்று சதாராவில் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த இரண்டரை ஆண்டுகளாக நான் முதல்வராக இருந்தேன். நான் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததில்லை. எனது தலைமையில் தேர்தலை சந்தித்தோம். இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பிரச்சாரத்திற்காக கடுமையாக உழைத்ததால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. நான் ஓய்வெடுக்க சாத்தாரா வந்துள்ளேன். பாஜக கூட்டத்தில் கருத்து வேறுபாடு இல்லை.
புதிய முதல்வர் யார் என்பதை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முடிவு செய்வார்கள். புதிய முதல்வர் இன்று தேர்வு செய்யப்படுகிறார். அவருக்கு முழு ஆதரவை வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார். மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் கூறுகையில், “பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறும். இதில், புதிய முதல்வர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வரும் 5-ம் தேதி பதவியேற்பு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள்,” என்றார். ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.