சென்னை: ”தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. சம்பா பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்ததாகவும், ஆனால் கடந்த மாதம் பெய்த கனமழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். அதிலிருந்து மீண்டு வந்த விவசாயிகள், நெற்பயிர்களில் நோய் தாக்கம் இருப்பதை கண்டறிந்தனர். அடுத்த 2 வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டு, பாதி நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்துள்ளன.
தற்போது அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே, இப்பகுதிகளை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், 22 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. விவசாயிகள் அனைவரும் கதறி அழும் நிலை வேதனை அளிக்கிறது. குழந்தையை வளர்ப்பது போல் பார்த்து வளர்க்கிறார்கள். எனவே விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் இந்த நாடு நன்றாக இருக்கும்.
நமக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு பிரச்னை என்றால், அவர்களுக்கு அரசு துணை நிற்க வேண்டும். அவர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஏற்கனவே டெல்டா பகுதி முழுவதும் பென்ஜால் புயலின் மழை மற்றும் வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான இழப்பீடுகளை இந்த அரசு இதுவரை வழங்கவில்லை. தஞ்சாவூர், மயிலாடுதுறையில் மீண்டும் மழை பெய்ததால் 22 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் முற்றிலும் நாசமாகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
“உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல்” அனைத்து பக்கங்களிலும் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை இந்த அரசு கொள்முதல் செய்ய வேண்டும். எனவே, இந்த அரசு விவசாயிகளின் இன்னல்களையும், துயரங்களையும் உடனடியாக பரிசீலித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறோம். அதேபோல் விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். “நானும் டெல்டா காரன்” என்று சொல்லும் தமிழக முதல்வர் உண்மையில் விவசாயிகளின் நெருங்கிய நண்பர், இந்த இக்கட்டான நேரத்தில் டெல்டா பகுதி விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமை” என்றார். இவ்வாறு அவர் கூறினார்.