சென்னை: தி.மு.க.,வுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
”தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளதால், மக்கள் அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்களின் திறமையின்மையால் மக்கள் அவதிப்படக்கூடாது”, என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது: சமீபத்தில் தி.மு.க., அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீண்டும் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது. இதில், தொலைநோக்கு பார்வை இல்லாததுடன், பட்ஜெட் ஆவணங்களை வாசிப்பது போல் அல்லாமல், தேர்தல் அறிக்கை போல் வாசிக்கப்பட்டது.
தமிழகத்தின் கடன் சுமை குறைக்கப்படும் என தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இதற்காக, சில பொருளாதார நிபுணர்களை ஒருங்கிணைத்த போதிலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை இரண்டு மடங்காக ஆகி உள்ளது.
கடந்த 2021 ஜூன் மாதம் தமிழகத்தின் முன்னாள் நிதியமைச்சர், வட்டி சுமையை குறைப்பதற்காக கடனை மறுசீரமைப்பது குறித்து பேசியிருந்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்களின் வாக்குறுதி வெறும் வார்த்தைகளாக மட்டுமே உள்ளது.
தற்போது தி.மு.க., அரசு தனது நிர்வாக சீர்குலைவை மறைப்பதற்காக, மாநிலத்தை மற்றொரு மாநிலத்தோடு தான் ஒப்பிட வேண்டும் என்பதை அறியாமல், மாநிலத்தில் மொத்த கடனை, நாட்டின் கடனுடன் ஒப்பிட்டு பேசி வருகிறது.
தமிழக அரசின் வருமானத்தின் பெரும்பகுதி டாஸ்மாக்கில் மது விற்பனை மூலம் மட்டுமே வருகிறது. அங்கிருந்து அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. அதற்கு மாறாக, மது விற்பனை மூலம் வருமானம் ஈட்டாத குஜராத் அரசு, ரூ.19,696 கோடி உபரி வருமானத்துடன் பட்ஜெட் தாக்கல் செய்தது. ஆனால், தமிழக அரசு ரூ.46,467 கோடி நிதிப்பற்றாக்குறையுடன் பட்ஜெட் தாக்கல் செய்தது.
தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்தது முதல், விளம்பரத்திற்காக மட்டும் செலவு செய்கிறது. தங்களது தோல்வியை மறைக்க, விளம்பரத்திற்காக அதிக பணம் செலவு செய்கிறது. 2023-24 ல் விளம்பரத்திற்காக தமிழக அரசு ரூ.35 கோடி செலவு செய்துள்ளது. இது 2024-25ல் ரூ.110 கோடி ஆக அதிகரித்தது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க.,வினர் ஊழல் மிக்கவர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை அற்றவர்கள் என்பது நிரூபணம் ஆகி உள்ளதால், மக்கள் அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்களின் திறமையின்மையால் மக்கள் அவதிபடக்கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.