ஆந்திரா: ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு… திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் ஆந்திர அரசியல் தளத்தை அதிரச் செய்துள்ளது. லட்டு கலப்படம் குறித்து சந்திரபாபு நாயுடு கூறியது புனையப்பட்ட கட்டுக்கதை என்று ஜெகன்மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1975 ஆம் ஆண்டிலிருந்து லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் நெய் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கூட பரிசோதனையில் அதில் பன்றி கொழுப்பு, மீன் ஆயில் உள்ளிட்டவை கலந்திருப்பது தெரியவந்ததாகக் கூறிய திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி ஷியாமளா ராவ், தரக்குறைவான நெய்யை சப்ளை செய்த திண்டுக்கலைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தை பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், திருப்பதி தேவஸ்தானத்தின் குற்றச்சாட்டை திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மறுத்துள்ளது. விஜயவாடாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்கவும், திசை திருப்பவுமே சந்திரபாபு நாயுடு தற்போது லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் என்றார்.
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ஆந்திர அரசிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.