புதுடில்லி: கெஜ்ரிவால் பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று பவானாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது, இடஒதுக்கீட்டில் 50 சதவீதம் என்ற தடையை உடைப்பது குறித்து கெஜ்ரிவால் தெளிவாக சொல்ல வேண்டும். இதை அவர் செய்யவில்லை என்றால், கெஜ்ரிவால் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எதிரானவர். கலவரங்கள் நடந்தபோது, கெஜ்ரிவால் எங்கே சென்றிருந்தார். அவர் உங்களுடன் (மக்களை பார்த்து) நின்றாரா?.
பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் இடஒதுக்கீடு, தலித்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், ஏழைகளுக்கு எதிரானவர்கள்.
கெஜ்ரிவால் ஊழல் அரசாங்கத்தை நடத்தினார். மோடி ஜி அவரது பேச்சில் பொய் சொல்கிறார். அவர் பொய் சொல்வது போல் கெஜ்ரிவால் பொய் சொல்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன்பு, கெஜ்ரிவால் யமுனை நதியில் குளித்து அதன் தண்ணீரைக் குடிப்பதாகக் கூறியிருந்தார். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
நீங்கள் மாசு கலந்த நீரைக் குடிக்க வேண்டும், ஆனால் கெஜ்ரிவால் ‘ஷீஷ் மஹாலில்’ வசிக்கிறார். அது கோடிக்கணக்கான மதிப்புள்ளதாகும். அவர் உங்களிடம் பொய் சொல்கிறார். மோடியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வெறுப்பைப் பரப்பி பல்வேறு மதங்கள், சாதிகள் மற்றும் மொழிகளைச் சேர்ந்தவர்களை சண்டையிட வைத்து, உங்கள் பணத்தை அதானி மற்றும் அம்பானி போன்றவர்களிடம் கொடுக்கிறார்கள். மோடி அரசு கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
நானும், காங்கிரசும் மோடியை பார்த்து பயப்படவில்லை. மாறாக அவர்தான் எங்களை பார்த்து பயப்படுகிறார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.