சென்னை: காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பெயரால் ஒரு பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும்.என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்தார். அவை வருமாறு:-
மூன்று கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரடியாக எடுத்துரைப்பதற்காக இன்று நான் அவர்களைச் சந்தித்தேன். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் பெயரால் ஒரு பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும். அதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
வறுமைக் கோட்டுக்கு உள்ளே உள்ளவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் கொடுப்பதைத் தடுப்பதற்காக ஒன்றிய அரசு வஞ்சகமாக எடுக்கின்ற பல நடவடிக்கைகளுக்கு எப்படியோ ஒரு வகையில் உச்சநீதிமன்றமும் உடன்பட்டுப் போகின்ற சூழலில், சூரிய ஒளி மின்சாரம் மூலமாக வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதற்கு அரசு முடிவெடுத்துவிட்டால், இதை தடுக்கின்ற முயற்சிகளிலிருந்து நாம் விடுபட்டு விடலாம் என்பதை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பது சாலச் சிறந்ததாக இருக்கும். அதையும் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதற்கு கோரிக்கையாக முதல்வர் அவர்களிடம் வழங்கினேன்.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்தல் அறிக்கை தயாரிக்கின்ற குழுவிடம் உடனே தெரிவிப்பதாக முதல்வர் கூறினார் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.