டெல்லி: பிரிவினைக்கு வித்திடும் கட்சியை ஆதரித்து இந்துக்கள் ஒன்றுபடுவது எப்படி சரி என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடப்பதாக மோகன் பகவத் குற்றம் சாட்டியிருந்தார். வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர் கதையாக இருப்பதால், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாட்டில் பிளவை விதைக்கும் கட்சிக்கு மோகன் பகவத் ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மோகன் பகவத் ஆதரிக்கும் கட்சி இந்திய அரசியலமைப்பை மாற்றுவதற்கான வேலைகளைத் தொடங்கி இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வேலை செய்கிறது என்று கார்கே சாடினார்.
இதேபோல், காங்கிரஸ் கட்சியை நகர்ப்புற நக்சல்கள் கைப்பற்றி விட்டதாக பிரதமர் மோடி கூறியதற்கு பதிலளித்த கார்கே, முற்போக்காளர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று அழைப்பது மோடியின் வழக்கம் என்று குறிப்பிட்டார்.
பாஜகவையே பயங்கரவாதக் கட்சி என்று கூறிய கார்கே, பாஜக பட்டியல் சாதியினரின் வாயில் சிறுநீர் கழிப்பதாகவும், பழங்குடியினரை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.