சென்னை: சென்னை பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணியை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டாளம் பகுதியில் ஆய்வு செய்த பின் அமைச்சர் சேகர் பாபு பேட்டி அளித்தார். இது தொடர்பாக அமைச்சர் கூறியதாவது:-
சென்னையில் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு சில இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிக திறன் கொண்ட 600 ஹெச்பி மின் மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்படுகிறது. வெள்ளச் சேதத்தை திறம்படச் சமாளித்து வரும் அரசின் நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்கள் நலனுக்காக 24 மணி நேரமும் தூங்காமல் உழைத்து வருகிறார். நம்மையும் ஓட வைக்கிறார். மழை, வெள்ளம் பாதித்த பணிகளை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டதில்லை.
2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போதும் எடப்பாடி பழனிசாமியின் கார் டயர் எங்கும் செல்லவில்லை. ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் மழை வரும் முன் மக்களை சந்தித்து ஆய்வு செய்ததாக கூறியுள்ளார்.