சென்னை: 2026 தேர்தலில் அதிக இளைஞர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அணைக்கட்டு சட்டசபை தொகுதியில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் 2026-ம் ஆண்டு தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-
தலைவருடைய எதிர்பார்ப்பும், எனது எண்ணமும் இதுதான். நிச்சயம் உங்களின் கோரிக்கையைத் தலைவரிடத்தில் எடுத்துச் சொல்லி 2026 தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகளைப் பெற்றுத் தர நான் முயற்சிக்கிறேன். இங்கு வந்திருக்கின்ற மூத்த கழக நிர்வாகிகள், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து புதிதாக வரக்கூடிய இளைஞர்களை நீங்கள்தான் வழிநடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நம்முடைய அரசு இந்த 4½ ஆண்டுகளில் பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள், குழந்தைகள், திருநங்கைகள் மாற்றுத் திறனாளிகள் இப்படி அத்தனை பேருக்கும் நம்முடைய தலைவர் பார்த்துப் பார்த்து பல்வேறு திட்டங்களை கொடுத்திருக்கிறார். இந்தத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் தொடர்ந்து பேசிப் பேசி அவர்களிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த 4½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 31 லட்சம் பேர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புகளை நாம் வழங்கி இருக்கின்றோம். அதுமட்டுமல்ல, நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக 10 லட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி 3 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி இருக்கின்றோம்.
யாருமே எதிர்பார்க்காத ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் கிட்டத்தட்ட 1¼ கோடி பேருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார். ‘தமிழ்ப் புதல்வன் திட்டம்’, புதுமைப் பெண் திட்டம், தாயுமானவர் திட்டம், 70 வயதுக்கு மேல் இருக்கக்கூடிய முதியோர்கள் இனிமேல் ரேஷன் கடைக்குப் போகத் தேவையில்லை. அவர்களின் வீடுகளுக்கே மாதந்தோறும் அந்த ரேஷன் பொருட்கள் வந்து சேரும் என்ற திட்டம். நேற்று முன்தினம் ஒரு ஜி.ஓ. போட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 70 வயதைக் குறைத்து இப்போது 65 வயதாக மாற்றிவிட்டார்.
இப்படி ஒவ்வொரு பிரிவாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்குப் பொறுப்பு, இது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.