நெல்லை: 11வது தோல்வி ஸ்டிக்கர்… சமூக நீதியை அழிக்கும் பாஜவுக்கு ஜால்ரா போடும் பழனிசாமி 11வது தோல்வி ஸ்டிக்கர் ஒட்ட தயாராகிறார் என்று நெல்லை பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நெல்லை பாளை. தெற்கு பைபாஸ் சாலை சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் உள்ள மைதானத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராதாபுரம் தொகுதியின் திமுக ேவட்பாளர் அப்பாவு, பாளையங்கோட்டை வேட்பாளர் அப்துல்வஹாப், நெல்லை வேட்பாளர் சுப்பிரமணியன், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அம்பை. காங். வேட்பாளர் வி.பி.துரை ஆகியோரை அறிமுகம் செய்து முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:
10 ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியில் தமிழ்நாட்டின் நிர்வாகத்தை சீரழித்து முடக்கி படு பாதாளத்திற்குள் தள்ளியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த தமிழ்நாட்டை மீட்டெடுத்து, மக்களுக்கு புதிய விடியலை தந்து இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் கொண்டிருக்கிறோம். இந்தியாவிலேயே பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ள நமது ஆட்சிக்கு என்ன பெயர் என்பது உங்களுக்கு தெரியும். இந்தியாவே தெற்கே திரும்பி பார்க்கிறது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளோம்.
மலையளவு சாதனைகளை நமது திராவிட மாடல் ஆட்சியில் செய்துள்ளோம். ஆனால் எந்த சுய சிந்தனையும் இன்றி துரோகத்தின் மொத்த உருவமான, மக்களால் புறக்கணிக்கப்பட்ட 10 தோல்வி பழனிசாமி நமது திட்டங்களை காப்பி அடித்து புதிய ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இப்போது 11வது தோல்விக்கு ஸ்டிக்கர் ஒட்ட மக்கள் தயாராகி விட்டார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினருக்கு எதிரான பாஜவிற்கு துணை போகிறார்.
பாஜ ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களும் இல்லை. இதுதான் மோடியின் மாடல் ஜெயலலிதா சட்டமன்றத்திற்கு வர முடியாமல் போன காலத்தில், அதிமுக தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. அதை நாங்கள் அன்று ஆதரித்தோம் என்பதை எடப்படி பழனிசாமி மறக்க வேண்டாம்.
உங்களை நம்பி பதவி கொடுத்த சசிகலாவை காலை வாரி விட்டவர் தான் நீங்கள், உங்களால் எந்தக் காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது. தமிழ்நாட்டை காக்க திமுக தான் ஆட்சிக்கு வரும் என தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அந்த வெற்றி இந்தியாவே திரும்பி பார்க்கும் மாபெரும் வெற்றி. சிறப்பான ஆட்சி தொடர நெல்லை மாவட்டத்தின் 5 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்