மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. எனினும் புதிய முதல்வர் யார் என்ற கேள்விக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், நாளை காலை, பா.ஜ., சட்டசபை கட்சி தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்தில் பங்கேற்க, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, பா.ஜ., அழைப்பு விடுத்துள்ளது.
இந்த சந்திப்பு மும்பையில் உள்ள விதான் பவனில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அக்கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநில பாஜக பொறுப்பாளருமான விஜய் ரூபானி ஆகியோர் மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டால், அவர் டிசம்பர் 5-ம் தேதி மாநில முதல்வராக பதவியேற்பார். மும்பை ஆசாத் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மும்பை பாஜக தலைவர் ஆதிஷ் ஷெலர் கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஸ்டேடியத்தில் அதிகபட்சமாக 40,000 பேர் தங்க முடியும். மைதானம் முழுவதுமாக நிரம்பி வழியும் வகையில் ஏற்பாடுகளை செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் மாலை 3.30 மணிக்குள் பதவியேற்பு விழாவுக்கு வர வேண்டும் என்றும், மாலை 5 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் பெயர் வெளியிட விரும்பாத பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவில் முதல்வர் மற்றும் 2 துணை முதல்வர்கள் பதவியேற்பார்கள் என்றும், அமைச்சர்களும் அன்றைய தினம் பதவியேற்பார்களா என்பது குறித்து பாஜக, சிவசேனா, தேசியவாத கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிர சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் டிசம்பர் 7-9 வரை நடைபெறும் என்றும், அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பார்கள் என்றும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 16 முதல் 23 வரை குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.