சென்னை: சீமான் மீது 2011-ல் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வளசரவாக்கம் போலீசாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான் மீது 2011-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு சீமானுடன் சமரசம் செய்து கொண்டதாக விஜயலட்சுமி போலீசில் கடிதம் அளித்தார். இவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால், விஜயலட்சுமி மீண்டும் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சங்கர், இந்த வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றார். அப்போது, சீமான் மீதான வழக்கு ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதி, 2011-ல் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.