சென்னை : பா.ஜ.க., அ.தி.மு.க. காழ்ப்புணர்ச்சி அரசியலை செய்து வருகிறது என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த 2019 மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட பரப்புரையினால் அமோக வெற்றி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
தி.மு.க. ஆட்சி அமைந்து, இன்று ஐந்தாம் ஆண்டில் காலடி பதித்து மகத்தான சாதனைகளை புரிந்து வருகிற நிலையில் திசையெங்கும் மக்கள் பாராட்டுகிற மகத்தான ஆட்சி புரிகிற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
2021-ல் ஆட்சி அமைந்தபோது, 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் சுமையோடு அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க.விடம் விட்டுச் சென்றது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவீதமாக உயர்ந்து மத்திய பா.ஜ.க. அரசின் வளர்ச்சியான 6.5 சதவீதத்தை விட உயர்ந்து சாதனை படைத்திருக்கிறது.
தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூபாய் 17 லட்சத்து 23 ஆயிரம் என்றளவிற்கு உயர்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் தனிநபர் சராசரி வருமானம் 2024-25ல் ரூபாய் 3.58 லட்சம். ஆனால், தேசிய சராசரி தனிநபர் வருமானம் ரூபாய் 2.6 லட்சமாக குறைவாக இருக்கிறது. அந்த வகையில் நாடே போற்றுகிற வகையில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டு வருவதை பொருளாதார வல்லுநர்கள் பாராட்டுகிறார்கள்.
மின்னணு சாதன ஏற்றுமதியில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 41.23 சதவீதமாக இருப்பது சாதனையாகும். அதேபோல, வணிக வரியில் கடந்த ஆண்டு 5 லட்சத்து 80 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. பத்திரப் பதிவுத்துறை 2021-ல் ரூபாய் 10,243 கோடியாக இருந்த வருவாய், 2025-ல் ரூபாய் 21,968 கோடியாக நான்கு ஆண்டுகளில் இருமடங்கு கூடியிருக்கிறது.
இந்தியாவின் மொத்த வேலை வாய்ப்பில் 15 சதவீதத்தை பெற்றிருக்கிற தமிழ்நாட்டில் 39,666 பதிவு செய்யப்பட்ட தொழிற் சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பதிவு 50 லட்சத்தை தாண்டி சாதனை படைத்திருக்கின்றன. வளர்ச்சி என்பது சென்னையை மட்டுமல்லாமல், கோவை, மதுரை, திருச்சி என்று அனைத்து நகரங்களிலும் பரவியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் திட்டங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காக திட்டமிடப்பட்டு பயனடைந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 45 ஆயிரம் பட்டதாரிகளும், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் 1 லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெற்று வருகிறார்கள். இவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் இல்லாத நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் பெற்று வருகிறார்கள். இது தமிழ்நாட்டின் அமோக வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கும் சிறந்த சான்றுகளாகும்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு,கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியிருக்கிறார். அவரது சாதனைகளின் சிகரமாக கலைஞர் மகளிர் உரிமை திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம் ஆகியவற்றில் மிகச் சிறந்த அளவில் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., அ.தி.மு.க.வைப் போன்ற தமிழக விரோத கட்சிகள் காழ்ப்புணர்ச்சி அரசியலை செய்து வருகிறார்கள். இதை முறியடிக்கிற வகையில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கட்டுக்கோப்பாக ஒருமித்த கொள்கை பற்றோடு செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.